November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷ் ரோஹிஞ்சா அகதிகள் முகாம் தீ விபத்தில் 400 பேர் மாயம்; 15 எரிந்த உடல்கள் மீட்பு

தெற்கு பங்களாதேஷில் ரோஹிஞ்சா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 400 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷின் தென்கிழக்கு நகரமான காக்ஸ் பஜார் அருகே பலுகாலி அகதிகள் முகாமில் திங்கட்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், குறைந்தது 15 பேரின் எரிந்த உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு ள்ளன.

இவற்றில் மூன்று குழந்தைகளின் உடல்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்து காரணமாக 560 பேர் காயமடைந்துள்ளதுடன், 45,000 பேர் வரை முகாமிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மியன்மாரின் இராணுவ ஒடுக்குமுறையிலிருந்து தப்பிய ரோஹிஞ்சா அகதிகளுக்கு பங்களாதேஷ் அடைக்கலம் கொடுத்துள்ளது.

பங்களாதேஷின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் அமைந்துள்ள நெரிசல் மிகுந்த அகதிகள் முகாம்களில் இலட்சக்கணக்கானவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களைச் சுற்றி முள்வேலி அமைக்கப்படாமலிருந்திருந்தால் இந்த துயர சம்பவம் குறைவான அழிவை ஏற்படுத்தியிருக்கும் என நோர்வே அகதிகள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் ஜோன் எகலேண்ட் கூறியுள்ளார்.

வேறு நாடுகளில் தஞ்சம் புகுவதற்காக ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்வதன் மூலம் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் ரோஹிஞ்சா அகதிகள் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.