November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வீகர்’ முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறை; சீன அதிகாரிகள் மீது பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தடை

சீனாவில் சின்ஜியாங் பிராந்தியத்தில் வாழும் வீகர் இன சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் தொடர்பில் பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சீன அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை அறிவித்துள்ளன.

வீகர் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 4 சீன அதிகாரிகளுக்கு  பொருளாதாரத் தடை விதித்துள்ளதாக பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

சின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான பொதுப் பாதுகாப்பு பணியகம் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறித்த 4 சீன அதிகாரிகள் மீதும் பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் ஆகியவற்றை விதித்துள்ளதாக டொமினிக் ராப் கூறியுள்ளார்.

“சின்ஜியாங்கில் எங்களுடைய காலத்தில் மிக மோசமான மனித உரிமை நெருக்கடி ஒன்று இடம்பெறுவதை பார்த்துக் கொண்டிருக்கமுடியாது. ஜின்ஜியாங்கில் என்ன நடக்கிறது என்பது குறித்து வெளியாகியுள்ள சான்றுகள் தெளிவானவை” என்றும் ராப் தெரிவித்துள்ளார்.

“இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடைபெறும் ஒரு இன அல்லது மதக் குழுவின் மீதான மிகப்பெரிய உரிமை மீறல்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“குறித்த இனக்குழுமத்துக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பில் வெளியான செயற்கைக்கோள் படங்கள், உயிர் தப்பியவர்களின் சாட்சியங்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள், ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட அமைப்புகளின் அறிக்கைகள் போன்றன தெளிவுபடுத்துகின்றன.

பெண்கள் வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்படுதல், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் போன்ற செயற்பாடுகள் பரவலாக இடம்பெறுகின்றன.

எங்களுடன் இணைந்து சில சர்வதேச நாடுகளும் இந்தத் தடையை அமுல்படுத்துவதன் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் கண்மூடி பார்த்துக்கொண்டிருக்காது என்ற தெளிவான செய்தியை சீன அரசாங்கத்திற்கு அனுப்புகிறது” என்றும் ராப் தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில், இனப்படுகொலையில் ஈடுபட்ட நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் வர்த்தக சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவருவதற்கு பிரிட்டிஷ் எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர் என்றும் ராப் மேலும் தெரிவித்துள்ளார்.