July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவில் எலிகளின் படையெடுப்பால் “பிளேக்” நோய் பரவும் அபாயம்

(photo : Facebook/Louise Hennessy)

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மில்லியன் கணக்கான எலிகளின் படை எடுப்பால் “பிளேக்” நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக கனமழை பெய்து வருவதால் அங்கு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு குயின்ஸ்லாந்து நகரங்களில் எலிகள் கிராமங்களுக்குப் படையெடுத்து வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

வீடுகள், சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் வைத்தியசாலைகளுக்குள் எலிகள் புகுந்து மனிதர்களை கடிப்பதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதிகமான எலிகள் நீர் தாங்கிகளில் இறந்து கிடப்பதாகவும் இதிலிருந்து வரும் நீரை பருகுவதால் உயிர்க்கொல்லி நோய் பரவும் அபாயம் நிலவுவதாகவும் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

 

இதேவேளை, இந்த பகுதிகளில் சிறுநீரக செயலிழப்பு மற்றும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு அரிய நோயான “லெப்டோஸ்பிரோசிஸ்” நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆபத்தான நோயான “லெப்டோஸ் பிரோசிஸிலிருந்து” தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் உள்ளூர் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.