January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்களில் இணையும் உலகத் தலைவர்கள்

பங்களாதேஷ் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்களில்  கலந்து கொள்வதற்காக இலங்கை, இந்தியா,நேபாளம்,பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களில் பங்களாதேஷு க்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

பங்களாதேஷின் சுதந்திர தின பொன்விழாவையும் தேசதந்தை பங்க பந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவையும் அந்நாட்டு அரசு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.

1971 விடுதலைப் போருக்குப் பின்னர் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் அரசு சுதந்திரம் பெற்றது.

பங்களாதேஷின் 50 ஆவது ஆண்டு சுதந்திரமானது தேசதந்தை பங்க பந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த தினத்துடன் இணைத்து கொண்டாடப்படுகின்றது.

இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பிரமுகராக மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் மார்ச் 17 ம் திகதி முதல் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 19 ஆம் திகதி கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அவரைத் தொடர்ந்து நேபாளத்தின் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி மார்ச் 22 முதல் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் கொண்டாட்டத்தில் இணையவுள்ளார்.

பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங் மார்ச் 24 ,25 ஆம் திகதிகளில் பங்களாதேஷில் இருப்பார்.

இறுதியாக பங்களாதேஷ்-இந்திய தூதரகங்களின் 50 ஆண்டு உறவைக் குறிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 26 ஆம் திகதி முதல் இரு தினங்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றார்.

இந்த கொண்டாட்டங்களின் போது, 1971 விடுதலைப் போரின் சுதந்திர தியாகிகளுக்கு மரியாதை செலுத்துதல், சிறப்பு இராணுவ அணிவகுப்புகள், மாநில விருந்து வழங்கல், பங்க பந்து அருங்காட்சியகத்தை பார்வையிடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் உலக தலைவர்கள் பங்குபெற உள்ளார்கள்.