January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அஸ்டிரா ஜெனேகா” குருதி உறைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் இல்லை;உலக சுகாதார ஸ்தாபனம்

“அஸ்டிரா ஜெனேகா” தடுப்பூசியின் பயன்பாட்டை சில உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளமைக்கு உறுதிப்படுத்தப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் உலக நாடுகளில் இருந்து கிடைத்துள்ள அறிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

“அஸ்டிரா ஜெனேகா” தடுப்பூசியைப் பெற்ற சிலர் குருதி உறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து உலகின் பல நாடுகள் தடுப்பூசியை இடைநிறுத்தியுள்ளன.

.இதுவரை நோர்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, எஸ்டோனியா, லிதுவேனியா, லக்சம்பர்க், இத்தாலி, மற்றும் லாட்வியா ஆகிய நாடுகளின் சுகாதார அதிகாரிகள் “அஸ்டிரா ஜெனேகா” இவ்வாறு தடுப்பூசி பயன்பாட்டை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் ஆலோசனை குழுவின் பேச்சாளர் “அஸ்டிரா ஜெனேகா” தடுப்பூசி மிகச்சிறந்தது என தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பு மருந்திற்கும் வெளியாகியுள்ள சுகாதார பிரச்சினைக்கும் எந்த தொடர்புமிருப்பதாக உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அஸ்டிரா ஜெனேகா” தடுப்பு மருந்தினை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

“அஸ்டிரா ஜெனேகா” தடுப்பூசியை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு “அஸ்டிரா ஜெனேகா” தடுப்பு மருந்தினை பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், “அஸ்டிரா ஜெனேகா” கொவிட் -19 தடுப்பூசி இரத்த உறைவு அதிகரிக்கும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என ஐரோப்பிய மருத்துவ முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியின் பக்க விளைவுகளாக பட்டியலில் இரத்த உறைவு இல்லை எனவும் ஐரோப்பிய மருத்துவ முகவர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“அஸ்டிரா ஜெனேகா” தடுப்பு மருந்தை பெற்ற ஐந்து மில்லியன் ஐரோப்பியர்கள் மத்தியில் இரத்த உறைவுடன் தொடர்புடைய சம்பவங்கள் 30 மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் குறித்த அமைப்பு கூறியுள்ளது.

“அஸ்டிரா ஜெனேகா” வின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு பல நாடுகள் எடுத்துள்ள முடிவு ஐரோப்பிய தடுப்பூசி பிரசாரத்திற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, “அஸ்டிரா ஜெனேகா” கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து அவுஸ்திரேலியாவின் சுகாதார அதிகாரிகள் கரிசனை எதனையும் வெளியிடவில்லை என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சுகாதார திணைக்களத்தின் செயலாளர் பிரென்டன் மேர்பியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவுஸ்திரேலியாவில் “அஸ்டிரா ஜெனேகா” தடுப்பு மருந்தை இடைநிறுத்துமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.