November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிரியாவின் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முயற்சிகள் தோல்வி’

“சிரியாவின் யுத்த குற்றவாளிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தங்கள் தேசிய நீதிமன்றங்களில் தீவிரப்படுத்தவேண்டும்” என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பாரிய குற்றங்கள், அநீதிகளிற்காக சிரியாவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன” எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

“பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிர்களை பலிகொண்டுள்ள சிரியாவின் மோதலில் ஒரேயொருவர் மாத்திரமே இதுவரை பாரிய குற்றங்களிற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

சிரியாவில் அரச படையினரின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் உட்பட காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும்” ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அவர்களின் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் தீர்வை காணவேண்டும். அதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வை மீள கட்டியெழுப்பமுடியும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‘தேசிய அரசாங்கங்கள் நீதியான, வெளிப்படையான பொது விசாரணைகளை மேற்கொள்வது அவசியமானது.இதன் மூலம் இவ்வாறான குற்றங்களிற்கான பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை குறைக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.