மியன்மாரில் ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைகள் அதிகரித்து வரும் நிலையில் மியன்மாருடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மரைஸ்பெயின் இதனை அறிவித்துள்ளார்.
மியன்மாரின் ரொஹிங்யா அகதிகள் உட்பட ஏனைய சிறுபான்மை சமூகத்தினரிற்கான உதவிகளை அரசசார்பற்ற அமைப்புகள் மூலமாகவே அவுஸ்திரேலியா வழங்கும் என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசசார்பற்ற அமைப்புகள் ஊடாகவே இதனை முன்னெடுப்போம் அரசாங்கம், அரசாங்க அமைப்புகள் மூலம் இதனை முன்னெடுக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மியன்மாரிற்கான இராணுவ உதவிகள் ஆங்கில கற்றுக்கொடுத்தல் போன்ற மோதல்களுடன் தொடர்பற்ற நடவடிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியன்மார் அதிகாரிகள் தடுத்துவைத்துள்ள அவுஸ்திரேலிய பிரஜையை விடுதலை செய்யவேண்டும் என தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்ககோரி வார இறுதியில் அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.