January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்காவுக்குத் தடை; முஸ்லிம்களின் கரிநாள் என்கிறது இஸ்லாமியக்குழு

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணிவதைத் தடை செய்வதற்கு ஆதரவாக மக்கள் சர்வஜன வாக்கெடுப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுகளாக இந்தத் தடை சட்டமூலம் பற்றிய பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியே இந்த யோசனையை முன்வைத்திருந்ததுடன், தீவிரவாதத்தை நிறுத்தவேண்டும் என்ற கோஷத்துடன் தீவிர பிரசாரத்தையும் முன்னெடுத்து வந்தது.

எனினும், சுவிஸ் அரசாங்கம் இந்த நடவடிக்கையை ஏற்க விரும்பாத நிலையில் ஒரு இலட்சம் கையெழுத்துக்களை பெறும் பட்சத்தில், வாக்கெடுப்பிற்கு வரும் என்ற நடைமுறையை பின்பற்றியது.

இதனையடுத்து, இடம்பெற்ற வாக்கெடுப்பில் 51 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்த சட்டமூலத்திற்கு ஆதரவான தரப்பினர், ‘முகத்தை மறைப்பது ஒரு சுதந்திர சமுதாயத்தில், ஒன்றாக வாழ்வதில் முரண்படுகிறது. இது பெண்களின் அடக்குமுறையின் வெளிப்பாடாகும். எனவே சம உரிமைகளுக்கான உரிமையுடன் பொருந்தாது’  எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சட்டத்தின் பிரகாரம் பொது இடங்களில் புர்கா ஆடைகளை எவரும் அணிய முடியாதிருந்தாலும், சுகாதார காரணங்கள், காலநிலை, வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான தினம் ‘முஸ்லிம்களுக்கான கரிநாள்’ என சுவிட்சர்லாந்தின் இஸ்லாமியக் குழுவொன்று தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்மானம் ‘பழைய காயங்களை கிளறுகின்றது, சட்ட சமத்துவமின்மை கொள்கையை மேலும் வலுப்படுத்துகின்றது. சிறுபான்மையினரை தனிமைப்படுத்துவதற்கான தெளிவான சமிக்ஞையை அனுப்புகின்றது’ என அந்தக் குழு தெரிவித்துள்ளது.