May 23, 2025 8:22:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச குடும்பத்தினருடன் வாழ்ந்தபோது தற்கொலை எண்ணம் தோன்றியது என்கிறார் இளவரசர் ஹரியின் மனைவி

Photo:DrToolz/Twitter

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருடன் வாழ்ந்தவேளை தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியதாக இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கல் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பிரிட்டிஸ் அரச குடும்பத்தினருடன் வாழ்வது மிகவும் கஷ்டமான விடயமாக காணப்பட்டதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்த இளவரசர் ஹரி, மேகன் மார்க்கல் ஆகியோர் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறினர்.

தற்போது இருவரும் மேகனின் பூர்விகமான அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் நிலையில், கடந்த மாதம் இருவரும் அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படுவதாக பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலொன்றில் மேகன், அரச குடும்பத்தில் இருக்கும் போது தான் எதிர்நோக்கிய பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

எங்களது மகன் ஆர்ச்சி நிறம் குறித்து அரச குடும்பம் கவலை கொண்டிருந்ததுடன் அவனுக்கு எந்தவித அரச குடும்ப பாதுகாப்பும் கிடைக்கக் கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருந்ததாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் எங்களுக்கு மிகவும் வேதனையை கொடுத்தது எனவும், ஆனாலும் மகாராணி மீது நாங்கள் இருவரும் மரியாதை வைத்திருந்தோம் எனவும் கூறியுள்ளார்.

நான் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவேளை தான் தனிமையை உணர்ந்ததாகவும், ஒரு கட்டத்தில் பல மாதங்களாக வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை எனவும் மேகன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நேரத்தில் தற்கொலை எண்ணங்கள் வந்ததாகவும், அந்த எண்ணங்கள் பயங்கரமானது எனவும், இதனால் அதுகுறித்து யாரிடம் உதவி கோருவது என தெரியாத நிலையில் நான் இருந்தேன் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  பிரிட்டிஷ் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவியும் மேகன் மார்க்கல் பொருளாதார ரீதியாக தாங்கள் கைவிடப்பட்டது, தற்கொலை எண்ணம் , திருமணம், மற்றும் பதுகாப்பு என அனைத்தையும் இருவரும் இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.