மௌசூலின் தேவாலய சதுக்கத்திற்கு விஜயம் மேற்கொண்ட பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை ஐ.எஸ். அமைப்புடனான மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.
சதுக்கத்தின் நான்கு தேவாலயங்களின் இடிபாடுகளிற்கு மத்தியில் உரையாற்றிய பரிசுத்த பாப்பரசர், ஈராக் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் பெருமளவில் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டமை சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் மட்டுமல்ல அவர்கள் விட்டுச்செல்லும் சமூகத்திற்கும் கணக்கிட முடியாத தீங்கை ஏற்படுத்தியுள்ளது என
தெரிவித்துள்ளார்.
நாகரீகத்தின் தொட்டிலான இந்த நாடு இவ்வளவு காட்டுமிராண்டித்தனத்தினால் மிகமோசமாக தாக்கப்பட்டிருப்பது எவ்வளவு மோசமானது என தெரிவித்த பாப்பரசர், பண்டைய வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பலர் பலவந்தமாக இடம்பெயர்ந்த அதேவேளை,பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும சகோதரத்துவம் படுகொலையை விட நீடித்தது.நம்பிக்கை வெறுப்பை விட சக்திவாய்ந்தது, போரை விட அமைதி சக்திவாய்ந்தது என்ற எங்கள் நம்பிக்கையை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம் எனவும் பாப்பரசர் குறிப்பிட்டுள்ளார்.