July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரலாற்றுச் சிறப்பு மிக்க இராக் விஜயத்தை ஆரம்பித்தார் பாப்பரசர்

(Photo:Steven Nabil/Twitter)

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் இராக்கிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இராக்கின் தலைநகர் பக்தாத் விமான நிலையத்தை வந்தடைந்த பாப்பரசருக்கு செங்கம்பள மரியாதை வழங்கப்பட்டதுடன் அவரை வரவேற்கும் விதத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றுள்ளது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின்னர் பாப்பரசர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இராக்கில் கடந்த சில வாரங்களாக ரொக்கட் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்றுள்ளதன் காரணமாக பரிசுத்த பாப்பரசரின் விஜயத்தை முன்னிட்டு இராக்கில் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெளிநாட்டு பயணங்களின் போது சாதாரண கார்களை பயன்படுத்தும் பரிசுத்த பாப்பரசரை விமான நிலையத்திலிருந்து அழைத்துச்செல்வதற்காக குண்டு துளைக்காத பி.எம்.டபிள்யூ கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விஜயத்தின் போது குறைந்து வரும் கிறிஸ்தவ சமூகத்திற்கு உறுதியளிப்பதற்கும், மதங்களுக்கு இடையிலான உரையாடலை வளர்ப்பதற்கும் பாப்பரசர் பிரான்சிஸ் முயற்சிப்பார்.

அத்துடன் இராக்கிற்கு முதன்முதலில் பாப்பரசர் வருகையை குறிக்கும் இந்த பயணத்தில், நாட்டின் உயர் அரசியல் மற்றும் மத அதிகாரிகளுடனான சந்திப்புகளும் இடம்பெறும்.

குறிப்பாக இராக்கின் மிகவும் மதிப்பிற்குரிய ஷியா முஸ்லிம் மதகுருவையும் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாப்பரசரை பாதுகாக்க சுமார் 10,000 இராக் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவுகளும் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாப்பரசர் ஊடகவியலாளர்களுடன் கைகுலுக்காமல் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன்
“நான் மீண்டும் பயணங்களை மேற்கொள்வது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன், இது ஒரு அடையாள பயணம். பல வருடங்களாக தியாகம் செய்த மண்ணை நோக்கிய கடமை எனவும்  பரிசுத்த பாப்பரசர்  தெரிவித்துள்ளார்.