ஆப்கானிஸ்தானில் மூன்று பெண் ஊடக பணியாளர்கள் தலிபான் கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஆப்கானிஸ்தானில், கடந்த 20 ஆண்டுகளில் வளர்ந்துவரும் கருத்துச் சுதந்திரத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, எனிகாஸ் தொலைக்காட்சி சேவையில் மொழிமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊடக பணியாளர்கள் மூவர் இரண்டு வெவ்வேறு துப்பாக்கி பிரயோகங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் முக்கிய சிவில் சமூக ஆர்வலரும் இதே தொலைக்காட்சி சேவையில் பணியாற்றியவருமான “மலாலா மைவன்ட்” சுட்டுக் கொல்லப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த மூன்று பெண்களும் வேளை முடிந்து வீட்டிற்கு நடந்துசென்ற போது துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களான இவர்கள் பகுதி நேரமாகத் தொலைக்காட்சி சேவையில் பணியாற்றி வந்துள்ளனர்.
குறித்த சம்பவங்களில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தலிபான் அமைப்பை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு வெட்கக்கேடான செயல் என தெரிவித்துள்ள சமூகநல அமைப்பின் தலைவர் ஒர்சலா அஷ்ரப் நேமத், கண்டிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல, இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.