சிரியாவில் கடந்த பத்து வருட காலத்தில் தடுத்துவைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2500க்கும் அதிகமானவர்களுடனான சந்திப்புகள் மற்றும் 100
இற்றிற்கும் மேற்பட்ட தடுப்பு முகாம்களிற்கான விஜயங்கள் ஆகியவற்றின் பின்னர் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
சிரிய யுத்தத்தில் தொடர்புபட்ட அனைத்து முக்கிய தரப்பினரும் பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படுதலிற்கு காரணம் தங்கள் எதிராளிகளை அச்சுறுத்துவதற்கும் தண்டிப்பதற்கும் அவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச படையினர், பத்திரிகையாளர்கள், அரசியல் எதிரிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் என பலதரப்பட்டவர்களை தடுத்து வைத்தமையே சிரியாவின் மோதலிற்கான முக்கிய காரணம்.இதுவே மோதல் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தியது என ஆணைக்குழுவின் தலைவர் போல்பின்கெரியோ தெரிவித்துள்ளார்.
ஆயுதக்குழுக்களும் ஐ.நா.வின் பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைப்புகளும் ஐ.எஸ் அமைப்பும் அதன் பின்னர் மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன என தெரிவித்துள்ள அவர்கள், பொதுமக்களிற்கு எதிரான கடுமையான மீறல்களில் ஈடுபட்டனர் என்றும் இது அடிப்படையில் சமய நம்பிக்கைகளின் தொனியை கொண்டிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுத்துவைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களில் பலர் தாங்கள் பல மாதமாக சூரிய வெளிச்சத்தையே பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ளனர் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுத்தமற்ற நீரை அருந்துமாறும் மோசமான உணவினை உண்ணுமாறும் நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டோம் என குறிப்பிட்ட அவர்கள்,கழிவறைகள் கூட இல்லாத சிறைகளில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர் எனவும் மருத்துவ வசதிகளும் தங்களுக்கு மறுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களிடமிருந்து போலியான வாக்கு மூலங்களை பெறுவதற்காக அரச படையினர் 20 விதமான வழிமுறைகளை பயன்படுத்தினார்கள் என விடுதலையானவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டது, உடல்பாகங்களை எரித்தனர், நகங்களை, பற்களை பிடுங்கினார்கள். நீண்ட நேரம் தலைகீழாக தொங்கவிட்டார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் என்னை சித்திரவதை செய்தனர், என்னை இங்கேயே கொலை செய்தால் யாருக்கும் தெரியாது என என்னை விசாரணை செய்த ஒருவர் தெரிவித்தார் என விடுதலையான ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.