சிரியாவில் 2013 ல் நடந்த இரசாயன ஆயுத தாக்குதலுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரான்ஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
பாரிஸை தளமாக கொண்ட ஊடக மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அமைப்பு வேறு இரு அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது மிக முக்கியமானது என ஊடக மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐநா பாதுகாப்பு சபையில் சிரியா தொடர்பான சர்வதேச தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான மேற்குலக நாடுகளின் முயற்சிகளை சீனாவும் ரஸ்யாவும் தடுத்து வருகின்றன.
பிரான்ஸ் ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளுக்குத் தஞ்சம் அளித்துள்ளது.
பிரான்ஸின் நீதிபதிகளுக்கு, உலகளாவிய ரீதியில் மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை விசாரணை செய்வதற்கான ஆணையுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் திகதி சிரியாவின் டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியில் வீசப்பட்ட இரசாயன குண்டுகளால் ஒரே நாளில் சுமார் 1400 க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
குறித்த தாக்குதல் சிரிய அரசின் படைகளால் மேற்கொள்ளப்பட்டதாக பிரான்ஸின் உளவுத்துறை சேவைகள் 2013 இல் முடிவு செய்தன.
எனினும் சிரிய அரசு தனது நாட்டு மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தின் கதவை திறந்துள்ளது.