January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘படகிலிருந்து மீட்கப்பட்ட ரொஹிஞ்சா அகதிகளுக்கு இந்தியா புகலிடம் வழங்கவேண்டும்’

படகிலிருந்து மீட்கப்பட்ட 81 ரொஹிஞ்சா அகதிகளுக்கு இந்தியா அடைக்கலம் வழங்கவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 81 ரொஹிஞ்சா அகதிகளுக்கு இந்தியா அடைக்கலம் வழங்கவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

‘எங்கள் மக்களை கரைக்கு கொண்டுவருவதற்கு இந்தியா அனுமதி வழங்கவேண்டும் என கெஞ்சிக்கேட்கின்றோம் என இந்தியாவில் உள்ள ரொஹிஞ்சா மனித உரிமை முயற்சி என்ற அமைப்பின் இயக்குநர் சாபெர் கியாவ் மின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எட்டு பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், நடுக்கடலில் சிக்குண்டுள்ள 81 உயிர்களை ஏற்பதற்கு எப்படி அனைத்து நாடுகளும் மறுக்கலாம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, இந்தியா சர்வதேச சட்டங்களின் கீழ் தனது கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டும் என தெரிவித்துள்ள மனித உரிமை வாட்ச் அமைப்பின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி, ‘ரொஹிஞ்சா மக்கள்  துன்புறுத்தலிற்கு உள்ளாகியுள்ளனர்.அவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருக்ககூடிய இடத்தை கண்டுபிடிப்பதற்காக மிகவும் அவதிப்படுகின்றனர். அவர்களை வரவேற்கவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

அந்தமான் கடற்பகுதியில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 81 பொதுமக்களையும் 8 உடல்களையும் இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர் என இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் மீட்கப்பட்டவர்கள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் இராணுவ ஒடுக்குமுறையிலிருந்து தப்பிய பல இலட்சம் ரொஹிஞ்சா அகதிகள் வாழும் பங்களாதேஷ்-இன் கொக்ஸ் பசார் பகுதியிலிருந்து குறிப்பிட்ட படகு 11ம் திகதி புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு நாட்களின் பின்னர் படகின் இயந்திரம் பழுதடைந்துள்ளது, படகில் உணவு மற்றும் குடிநீரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

உயிருடன் காப்பாற்றப்பட்டவர்களில் பலர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் முற்றாக நீர்தன்மை இழந்த நிலையிலும் காணப்பட்டனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.