July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பத்திரிகையாளர் கஷோக்ஜியின் கொலைக்கு பின்னால் சவுதி இளவரசரே இருந்துள்ளார்” அமெரிக்க புலனாய்வுப் பிரிவு

துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தில் வைத்து பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்வதற்கான அனுமதியை சவுதி அரேபியாவின் இளவரசர் முகமட் பின் சல்மான் வழங்கினார் என அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்திற்கு சென்றிருந்த போது, பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவு, பத்திரிகையாளரை இஸ்தான்புல்லில் உயிருடன் பிடிப்பதற்கான அல்லது கொலை செய்வதற்கான நடவடிக்கைக்கு சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் அனுமதி வழங்கினார் என நாங்கள் கணிப்பிட்டுள்ளோம் என தகவல் வெளியிட்டுள்ளது.

இளவரசர் இந்த நடவடிக்கைக்கான அனுமதியை வழங்கியிருப்பார் என தாங்கள் கருதுவதற்கான மூன்று காரணங்கள் உள்ளன என அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

2017 முதல் சவுதி அரேபியா குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை இளவரசர் தன்னிடமே வைத்திருந்தார் என்பதுடன் பத்திரிகையாளர்களிற்கு எதிரான நடவடிக்கையில் இளவரசரின் ஆலோசகர் ஒருவரும் அவரது பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களும் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் உள்ள சவுதி அரேபிய அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இளவரசர் ஆதரவு வழங்கிவந்துள்ளார் என்றும், இதன் காரணமாகவே ஜமால் கஷோக்ஜிக்கு எதிரான நடவடிக்கைக்கு இளவரசர் அனுமதி வழங்கியிருப்பார் என கருதுவதாகவும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

2017 சவுதியில் இருந்து வெளியேறி துருக்கி சென்றிருந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி 2018 செப்டம்பர் 28 ஆம் திகதி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்வதற்காக விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு சென்றிருந்த போதே கொல்லப்பட்டுள்ளார்.