November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா: ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க புதிய வழிவகைகளை கண்டறிக’: ஆணையர் கோரிக்கை

இலங்கையில் ஆயுத மோதல் முடிவடைந்து சுமார் 12 ஆண்டுகள் கடக்கின்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதிலும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதிலும் இலங்கையின் உள்ளக நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அதன் ஆணையர் மிஷேல் பச்சலெட் இன்று சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2015 இல் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாது, கடந்த அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் நேர்மையான, உண்மை கண்டறியும் மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைகளை கைக்கொள்ளத் தவறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் மோசமான குற்றங்களுக்கு காரணமாக அமைந்த பொறிமுறைகள், கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகளுடன் நபர்களும் அண்மையில் அதே அமைப்புடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் மிஷேல் பச்சலெட் தெரிவித்தார்.

கடந்த ஓராண்டில் மோசமான மாற்றங்கள் இலங்கையில் தலைதூக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஆணையாளர், சிவில் சமூகத்தினருக்கும், சுதந்திர ஊடகங்களுக்கும் இருந்த வாய்ப்புகள் அருகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“நீதித்துறையின் சுதந்திரம், மனித உரிமைகள் ஆணையம், தேசிய பொலிஸ் ஆணையம் மற்றும் ஏனைய முக்கிய அரச அமைப்புகள் அண்மைய 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் மோசமாக வலுவிழந்துள்ளன.

முக்கிய சிவிலியன் நிர்வாகப் பணிகள் இராணுவ மயமாக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டின் உயரிய அரச அதிகாரிகள் முதற்கொண்டு, பிரிவினைவாத மற்றும் பாரபட்சமான அணுகுமுறைகள் மூலம் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களை ஒதுக்கி வைக்கும் போக்கில் உள்ளனர்.

கொவிட்-19 தொற்றால் உயிரிழப்போரை எரிக்கும் கட்டாயக் கொள்கை முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களுக்கு வலியையும் துயரத்தையும் கொடுத்துள்ளது.

கடந்தகால அரசாங்கங்கள் உண்மையை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைகளை உறுதிசெய்யவில்லை. உண்மையில், பிரபலமான மனித உரிமை வழக்குகளில் கூட அரசாங்கம் நீதி விசாரணைகளை தடுத்துள்ளது” என்று மிஷேல் பச்சலெட்-இன் அறிக்கை கூறுகின்றது.

முந்தைய ஆணைக்குழுக்களின் முடிவுகளை ஆராய்வதற்காக 2021 ஜனவரியில் நியமிக்கப்பட்ட புதிய ஆணையம் கூட எந்தவிதமான பலனையும் அளிக்கப் போவதில்லை என்றும், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு வழங்கிய ஆதரவை இலங்கை விலக்கிக் கொண்டதன் மூலம், குற்றமிழைத்தோர் “தண்டனையிலிருந்து தப்பியிருக்கும் நிலையை” தடுப்பதற்கு உள்நாட்டு பொறிமுறையில் வாய்ப்பில்லாமல் போய்விட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

எனவே, இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்க, சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்காக மனித உரிமைகள் பேரவை புதிய வழிவகைகளை கண்டறிய வேண்டும் என்றும், உறுப்பு நாடுகளில் நீதி விசாரணைகளை தொடர்வதற்கு வசதியாக- எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்காக- ஆதாரங்களை சேகரித்து பாதுகாக்கும் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் மிஷேல் பச்சலெட் கூறியுள்ளார்.

“மனித உரிமைகள் நிலவரத்தையும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் முன்னேற்றங்களையும் தொடர்ந்தும் கண்காணிக்க எனது அலுவலகம் தயாராக உள்ளது” என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு ஆணையர் மிஷேல் பச்சலெட் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.