October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவின் வீகர் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகளை ‘இனப்படுகொலை’ என தீர்மானம் நிறைவேற்றியது கனடா

சீனா, வீகர் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக உலகளாவிய ரீதியில் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது சீனாவுக்கு மற்றுமொறு தலையிடியாக மாறியுள்ளது.

இந்நிலையில் சீனா தனது நாட்டின் வீகர் முஸ்லிம்களை துன்புறுத்தும் செயற்பாடுகளை ‘இனப்படுகொலை’ என தெரிவிக்கும் தீர்மானம் கனடாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கனடாவின் எதிர்கட்சியான கென்சவேர்ட்டிவ் கட்சி பொதுச்சபையில் கொண்டுவந்த இந்த பிரேரணை, 338 எம்.பிகள் அடங்கிய சபையில் 266 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றிப்பட்டுள்ளது. அத்தோடு எவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

வீகர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நீடிக்கும் பட்சத்தில் 2022 குளிர்கால ஒலிம்பிக்கை சீனாவிலிருந்து வேறு இடத்திற்கு நகர்த்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் வலியுறுத்தும்படி இந்த பிரேரணை அரசாங்கத்தை கோருகிறது.

இந்நிலையில், சீனாவில் ஒரு மில்லியன் வீகர் முஸ்லிம்களும் டேர்கிக் முஸ்லீம்களும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டுல், அங்கிருந்து தப்பியவர்களிடமிருந்தும் நேரில் பார்த்தவர்களிடமிருந்தும் தமக்கு கிடைத்த வாக்குமூலங்கள் பயங்கரமானவை எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உண்மையான துயரம் இடம்பெறுகின்றது, இனப்படுகொலை இடம்பெறுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

சீனாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரைப் பாதுகாக்க கனடா அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்படும், என வாக்களிப்பின் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டுல் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கனடாவின் இந்த தீர்மானத்தை சீன தூதுவர் காங் பீவுவின் நிராகரித்துள்ளார். சின்சியாங்கில் இனப்படுகொலை எதுவும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிலும் மேற்குலகில் உள்ளவர்களும் விழுமியங்களை பின்பற்றுவது குறித்து பேசுகின்றனர் ஆனால் உண்மையான தகவல்களை மதிப்பதும் பொய்யான தகவல்களை பரப்புவதை தவிர்ப்பதுமே உண்மையான விழுமியம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

கனடா சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் ஐநாவும் மனித உரிமை அமைப்புகளும் சீனாவின் சின்சியாங் பிராந்தியத்தில ஒரு மில்லியன் வீகர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

அதேவேளை, அன்மையில் வீகர் முஸ்லிம்கள் நடத்தப்படும்விதம் குறித்து பிபிசியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியின் காரணமாக, விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தி பிபிசி செய்தி சேவைக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு தமது நாட்டில் சீனா தடைவிதித்தது.