July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காபூல் குண்டு வெடிப்பில் காயமடைந்த தாயின் அருகில் கதறும் குழந்தைகள்: மனதை உலுக்கிய காணொளி

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் காயமடைந்து மயக்கமடைந்த தாயின் அருகில் இரத்தக் கறையுடன் கதறிக் கொண்டிருக்கும் இரண்டு குழந்தைகளின் காணொளி பலரின் மனதையும்  உலுக்கியுள்ளது.

தலைநகர் காபூலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர், ஐவர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் வெளியான காணொளி ஒன்றில், உயிரிழந்தவர்களின் உடல்கள் தரையில் மூடப்பட்டு இருப்பதையும், அருகே காயமடைந்த நிலையில் மயக்கமடைந்து  காணப்படும் தாயை எழுப்புவதற்கு கதறி அழுதபடி இரண்டு குழந்தைகள் முயல்வதையும் காண்பிக்கின்றது.

இரத்தக் கறையுடன் காணப்படும் குழந்தையொன்று ‘அம்மா எழுந்திருங்கள்’ என்று அழுவதையும் கேட்க முடிகின்றது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் இந்தக் காணொளி தொடர்பில் பலரும் தமது உணர்வுகளை பதிவிட்டுவருகின்றனர்.

“காயமடைந்த தாயிற்காக குழந்தைகள் கதறும்போது இந்தச் செயலை செய்தவர்கள் எப்படி தங்கள் வேலையை நியாயப்படுத்த முடியும்? இது நிறுத்தப்படவேண்டும்” என அரச சமாதான குழுவின் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, இரண்டு குழந்தைகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளதாகவும் தாய் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.