November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹரி- மேகன் தம்பதியினர்: பொறுப்புக்களை துறந்தாலும் அரண்மனையின் ‘அன்புக்குரியவர்களாக’ இருப்பார்கள்

பிரித்தானியாவின் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்பத்தின் கடமைகளை ஆற்றும் உறுப்பினர்களாக மீண்டும் திரும்பமாட்டர்கள் என பக்கிம்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அவர்கள் அரச குடும்பத்தின் பொதுவாழ்க்கையுடன் தொடர்புபட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் தொடரமாட்டார்கள் என்றும் அரண்மனையிலிருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் ‘குடும்பத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களாக தொடர்ந்தும் இருப்பார்கள்’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்தின் மூத்த நிலை உறுப்பினர்கள் என்ற அந்தஸ்திலிருந்து விலகிக்கொள்வதாகவும் அரச குடும்பத்தின் நிதியில் தங்கியிருக்காமல் சுயாதீனமாக இயங்கப்போவதாகவும் அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரியில் அறிவித்திருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் அரச குடும்ப பொறுப்புக்களை அதிகாரபூர்வமாக துறப்பதாக அவர்கள் அறிவித்திருந்த பின்னர் ‘மேன்மை தங்கிய அரச குடும்பத்தவர்’ (His/Her Royal Highness) என்ற கௌரவ அடைமொழியை அவர்கள் இருவரும் இழந்தனர். கௌரவ இராணுவப் பதவியையும் ஹரி இழந்தார்.

எனினும் இளவரசராகப் பிறந்த காரணத்தினால் ‘இளவரசர்’ என்றே ஹரி தொடர்ந்தும் அழைக்கப்படுவார்.

தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவரும் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர், ‘சேவை என்பது உலகளாவியது’ என்றும் முன்னரைப் போலவே தாம் சார்ந்த அமைப்புகளுக்கான ஆதரவு தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

அரச குடும்பத்தின் சார்பில் இராணுவம், கொமன்வெல்த் மற்றும் தொண்டு அமைப்புகளில் வகித்த பொறுப்புக்களையும் கடமைகளையும் ஹரி- மேகன் தம்பதியினர் பிரிட்டிஷ் மகாராணியாரிடம் திருப்பி ஒப்படைக்கவுள்ளனர்.