January 31, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ள’ துபாய் இளவரசி: விசாரணைக்கு தயாராகிறது ஐநா

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதியும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் மொஹமத் பின் ரஷித் அல் மக்தூமின் மகள் லத்தீபா வீடொன்றில் வெளித் தொடர்புகள் இன்றி சிறைவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அந்நாட்டு அரசிடம் விசாரணை நடத்தவுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் துபாயிலிருந்து கடல்வழியாக  தப்பிச்செல்ல முயன்ற லத்தீபா இந்தியாவின் மேற்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு மீண்டும் துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரியவருகிறது.

அதன் பின்னர் துபாய்க்கு கொண்டு செல்லப்பட்டு வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்ட லத்தீபா, ஒரு வருடத்திற்கு பிறகு, ரகசியமாக மறைத்து வைத்திருந்த தொலைபேசி மூலம் அனுப்பிய வீடியோ பதிவுகளை பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் “நான் ஒரு பணயக்கைதியாக இங்கே இருக்கிறேன், எனது வீடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது, வீட்டிற்கு வெளியே ஐந்து ஆண் காவலர்களும், வீட்டிற்கு உள்ளே இரண்டு பெண் காவலர்களும் உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் எனது பாதுகாப்பு மற்றும் உயிர் குறித்து அச்சமாக உள்ளது’ என்று லத்தீபா கூறுகிறார்.

இதனையடுத்து இந்த வீடியோ சர்வதேச கவனத்தை பெற்றுள்ளதுடன் பல நாடுகள் இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

‘லத்தீபா வெளியிட்டுள்ள வீடியோ மிகவும் கவலையளிக்கின்றது’ என பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ‘ஒரு இளம்பெண் கடும் அழுத்தத்தில் இருப்பதை வீடியோ வெளிப்படுத்தியுள்ளது, இந்த விடயம் தொடர்பில் ஐநா எடுக்கவுள்ள நடவடிக்கைகளை பிரிட்டன் உன்னிப்பாக அவதானிக்கும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், லத்தீபா குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கேள்வி எழுப்பவுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் நாங்கள் இது குறித்து நிச்சயம் கேள்வி எழுப்புவோம், ஐநாவின் ஏனைய அமைப்புகளும் இந்த விடயத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவுள்ளன எனவும் ஐநா தெரிவித்துள்ளது.