April 29, 2025 10:25:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் குடும்பத்தை விடுவிக்குமாறு வழக்கறிஞர்கள் கோரிக்கை

Tamil Refugee Council

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் குடும்பமொன்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர்களின் வழக்கறிஞர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வயதுக் குழந்தையின் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பத்தை அதிகாரிகள் கையாண்ட விதம் தொடர்பில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைத் தொடர்ந்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்தில் பிலோயீலா (Biloela) என்ற இடத்தில் வசித்துவந்த பிரியா- நடேஸ் முருகப்பன் தம்பதியினரையும், அவுஸ்திரேலியாவில் பிறந்த கோபிகா(5), தருனிகா(3) ஆகிய அவர்களின் இரண்டு மகள்களையும், குடிவரவுத் துறை அதிகாரிகள் 2018 ஆம் ஆண்டில் மெல்பர்ன் தடுப்பு முகாமுக்கு கொண்டுசென்றனர்.

அவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்ப அதிகாரிகள் எடுத்த முயற்சி, கடைசி நேர தடையுத்தரவு ஒன்றின் மூலம் தடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இந்த நிலையில், பிரியா- நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகளான தருனிகாவின் வீசா விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட அதிகாரிகள் முடிவெடுக்கும் “நடைமுறையின் போது நியாயாயமாக” நடந்திருக்கவில்லை என்றும், அதற்காக 2 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் அதிக தொகையை சட்ட செலவாக அவர்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் கடந்த ஆண்டில் அவுஸ்திரேலியாவின் மத்திய மேல்நிலை நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை இன்று செவ்வாய்க்கிழமை நிராகரித்துள்ள நீதிமன்றம், மீண்டும் முன்னர் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் தொடர்பில் தொடர்ந்தும் நடக்கவுள்ள வழக்கு விசாரணைகள், இழுபறியாக நீடிக்கும் சூழ்நிலை உள்ளதால், சுமார் மூன்றாண்டுகளாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த குடும்பத்தை சமூகத்துடன் சேர்ந்து வாழ அனுமதிப்பதே நியாயமானது என்று அவர்களின் வழக்கறிஞர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே, நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பின் சட்ட விளைவுகள் பற்றி அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாக உள்துறை திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

“அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை தெளிவானது. சட்டவிரோதமாக, கடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் வர முற்படுவோர் இங்கே குடியேற முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தின் தஞ்சக் கோரிக்கை குறித்து பல வழிகளிலும், பல்வேறு நீதி நிறுவனங்களிலும் ஆராய்ந்து பார்க்கப்பட்டுள்ளதாகவும், அரசின் தஞ்சப் பாதுகாப்பு கிடைக்க வேண்டியவர்கள் என குடும்பத்தின் எந்த உறுப்பினரும் கண்டறியப்படவில்லை என்றும் உள்துறை திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

“பிரஜை அல்லாதவர்கள்; வீசா அனுமதியின்றி, தங்கியிருப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் முயன்று பார்த்தவர்கள், சுய-விருப்பத்தின் பேரில் வெளியேறுவதனை அவுஸ்திரேலியா ஊக்குவிக்கின்றது.

அப்படி வெளியேற விரும்பாதவர்கள், தடுத்துவைக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்” என்றும் உள்துறை திணைக்களம் கூறியுள்ளது.

2017 ஆம் ஆண்டில் தஞ்சப் பாதுகாப்பு நிராகரிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் சட்டரீதியான அந்தஸ்தும் தருனிகாவின் அந்தஸ்தும் தொடர்புபட்டவை என்று மத்திய அரசு வாதிட்டு வருகின்றது.

இலங்கையில் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுவதாக பிரியா- நடேஸ் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அவர்களை சமூகத்துடன் சேர்ந்து வாழ அரசு அனுமதிக்க வேண்டும் என்று பிலோயீலா உள்ளூர் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துவருகின்றனர்.

“பிரதமரும் அவரது அதிகாரிகளும் கருணை காட்டியிருந்தால் மூன்றாண்டுகளாக அவர்கள் துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டார்கள்..அவர்கள் மீது கருணை காட்டுமாறு தடுப்புக்காவலின் 1078 ஆவது நாளில் வேண்டுகின்றோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.