
ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அமெரிக்கர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.
கிர்குக் மாகாணத்தில் உள்ள எர்பில் நகருக்கு அருகிலிருந்து இந்த ரொக்கட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில ரொக்கட்கள் விமான நிலையம் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து, வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
107 மில்லி மீட்டர் 14 ரொக்கட்கள் ஏவப்பட்டுள்ளதாகவும், மூன்று ரொக்கட்கள் இராணுவத் தளத்தைத் தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள சர்வதேச படையணிகளின் தளமாகக் காணப்படும் விமான நிலையத்தின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல்களைத் தொடர்ந்து விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.