July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சவுதி அரேபியாவின் இரு விமான நிலையங்கள் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமான தாக்குதல்

Photo-JACDEC_ twitter

சவுதி அரேபியாவின் ஜெத்தா, அபா விமான நிலையங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் மீண்டும் தாக்கியுள்ளதாக யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் யஹ்யா,தங்களின் தாக்குதல் காரணமாக இந்த விமான நிலையங்கள் இரண்டு மாதங்களிற்கு செயற்படமுடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை வெடிக்க வைத்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

தாங்கள் தொடர்ச்சியாக சவுதி அரேபியாவை இலக்குவைத்து எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களிற்கு முன்னர் யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அப்ஹா விமான நிலையத்தை இலக்குவைத்து ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் தென்பகுதியில் உள்ள விமான நிலையம் மீது நான்கு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யேமனில் சவுதி அரேபியா மேற்கொண்டுள்ள விமான தாக்குதலிற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் என கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யேமன் கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதலை உறுதிசெய்துள்ள சவுதி அரேபியா பயணிகள் விமானமொன்று தீப்பிடித்து எரிந்தது என தெரிவித்துள்ளது.

இது ஒரு யுத்தகுற்றம் என்றும் பயணிகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ள சவுதி அரேபியா விமானத்தில் பரவிய தீ அணைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தொடர்ச்சியாக ஆளில்லா விமான தாக்குதல்களை முன்னெடுப்பதும் சவுதி அரேபியா அவற்றை வீழ்த்திவருவதும் குறிப்பிடத்தக்கது.