July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இரவுநேர கடத்தல்கள்

(Phot0:MatthewTostevin/Twitter)

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை இரவுநேரத்தில் கைது செய்து கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதனால் அந்நாட்டு மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

மியன்மாரில் அரசாங்கத்தைக் கவிழ்த்த இராணுவத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகின்ற நிலையில் இவ்வாறான இரவுநேரக் கைதுகளால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மியன்மாரின் பல பகுதிகளில் தூக்கமற்ற இரவுகள் வழமையாகிவிட்டதாகவும் நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினர் இரவு நேரங்களில் வீடுகளை சோதனையிட்டு கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்னும் ஆவேசமடைந்த மியன்மார் மக்கள் தெருக்களில் கூடி ஆங் சான் சூ சியை விடுவிக்கக் கோரும் வாசகங்களுடன் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு நேபிடாவின் முக்கிய பகுதிகளிலும் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் ‘இரவில் கடத்தும் வேலையை நிறுத்து’ என்றும் குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மக்கள் இரவுநேரங்களில் கண்விழித்திருந்து ஒருவரையொருவரை பாதுகாக்கின்றனர் எனவும் மக்கள் அச்சமடைந்தவர்களாக பதற்றமடைந்தவர்களாகவும் காணப்படுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இராணுவத்தினர் வருவது குறித்து எச்சரிக்கை செய்வதற்காக பானைகளை தட்டி மக்கள் ஒலி எழுப்புவதுடன் யாங்கூனில் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் வருவதை பார்த்ததும் மக்கள் எச்சரிக்கை செய்வதையும் அந்த நாட்டு ஊடகங்களால் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் பில்ரொபேர்ட்சன் ” இரவுநேர கைதுகள் அதிகரிக்கின்றதாகவும் இரவுகளில் மக்கள் வீடுகளில் இருந்து இழுத்துசெல்லப்படுகின்றனர்” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.