முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ‘குற்றமற்றவர்’ என்று அவர் மீதான விசாரணையின் முடிவில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை தீர்மானித்துள்ளது.
ஜனவரி 6-ஆம் திகதி காங்கிரஸ் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவாளர்களைத் தூண்டியதாக டொனால்ட் ட்ரம்ப் மீது ஜனநாயகக் கட்சியினர் கொண்டுவந்த தீர்மானம் தொடர்பில் செனட் சபை விசாரணை நடத்தியது.
இரு தரப்பு வாதங்களின் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ட்ரம்பை குற்றவாளியாக அறிவிப்பதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு செனட் சபை உறுப்பினர்களிடத்தில் கிடைக்கவில்லை.
இரண்டாவது முறையாக பதவிநீக்க விசாரணைக்கு உள்ளாகும் ஒரே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!
மொத்தமாக உள்ள 100 செனட் உறுப்பினர்களில் 57 பேர் ட்ரம்ப் ‘குற்றவாளி’ எனவும், 43 பேர் ட்ரம்ப் ‘குற்றமற்றவர்’ என்றும் வாக்களித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களில் 7 பேரும் ட்ரம்ப் ‘குற்றவாளி’ என்றே வாக்களித்தனர்.
இந்த விசாரணையின் முடிவில் ‘குற்றவாளியாக’ தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், இனிவரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து ட்ரம்ப் தடுக்கப்பட்டிருப்பார்.
‘என் மீதான அரசியல் பழிவாங்கல் முயற்சி தோல்வி அடைந்துள்ளது..எனது பயணத்தை தொடர்வேன்’ என்று தீர்ப்பின் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.