மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூ சி உட்பட அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்படுவதை வலியுறுத்தி, ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐநா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பின்றி, ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.
சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒரு மித்த கருத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளன.
வாக்களிப்புக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ‘ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல’ என்று ஐநாவுக்கான மியன்மாரின் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இராணுவப் புரட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை இராணுவம் நிறுத்த வேண்டும் என்றும் ஐநா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியன்மாரின் இராணுவப் புரட்சிக்குப் பதிலளிக்கும் விதமாக, தண்டனைத் தடைகள், ஆயுதத் தடைகள் மற்றும் பயணத் தடைகள் விதிப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு ஐநா மனித உரிமைகள் பேரவை, பாதுகாப்புப் பேரவையைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மியன்மார் மீது தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, ஐநா உறுப்பு நாடுகளும் இவ்வாறான தடைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியன்மார் இராணுவத்தினர் ஆயுத அடக்குமுறைகளைப் பயன்படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐநா விசேட அறிக்கையாளர் தோமஸ் அன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.