January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யேமனில் ஐந்து வயதிற்கு உட்பட்ட 4 இலட்சம் சிறார்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் – ஐ.நா எச்சரிக்கை!

File Photo : Facebook/UNICEF Yemen

யேமனில் இந்த வருடம் ஐந்து வயதிற்கு உட்பட்ட 2.3 மில்லியன் சிறார்கள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என நான்கு ஐக்கிய நாடுகளின் அமைப்புகள்  அறிக்கை வெளியிட்டுள்ளன.

இவர்களில், 400,000 குழந்தைகள் மற்றும் சிறார்கள் அவசர சிகிச்சை பெறாவிட்டால் இறந்துவிடுவார்கள் என்றும் ஐ.நாஅமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இப்புள்ளிவிவரங்களை, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF), உலக உணவுத் திட்டம் (WFP)  , உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியன கூட்டாக தெரிவித்துள்ளன.

இவ் மதிப்பீடுகள் யேமனின் உதவிக்கான அழுகுரல் என ஐநா அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.

யுத்தம் காரணமாக உருவாகியுள்ள மந்தபோசாக்கு மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக ஐநா அமைப்புகள் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளன.

அத்தோடு அங்கு 2020 – 2021 இல் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போசாக்கின்மை ஐந்து வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் ஐ.நா அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

யேமனில் 2015 ஆம் ஆண்டில் யுத்தம் தீவிரமடைந்ததிலிருந்து பதிவான கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் இது மிக உயர்வான விகிதத்தை காண்பிப்பதாக அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.

ஊட்டச்சத்து குறைபாடு ஒரு சிறுவரின் முதல் இரண்டு ஆண்டுகளில் உடல் மற்றும் அறிவாற்றல்  வளர்ச்சியை பாதிக்கின்றது, இது பெரும்பாலும் மீளமுடியாத, நோய்களுக்கு காரணமாவதாகவும் ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறார்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் நிவர்த்தி செய்வதில் தாயின் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா அமைப்புகள் எனினும் யேமனில் 1.2 மில்லியன் கர்ப்பிணித்தாய்மார்களும் பாலூட்டும் தாய்மார்களும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில், குழந்தைகள் வளர உலகின் மிக ஆபத்தான இடங்களில் யேமன் ஒன்றாகும் என அமைப்புகள் தமது அறிக்கையில் கூறியுள்ளன.