November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிபிசி உலக சேவைக்கு சீனாவில் தடை விதிப்பு: உலக நாடுகள் கடும் கண்டனம்

(Photo:Reuters/Twitter)

பிபிசி உலக சேவை  நிகழ்ச்சிகளை தனது நாட்டில் ஒளிபரப்புச்செய்வதற்கு சீனா தடை விதித்துள்ளது.

அதற்கமைய கொரோனா வைரஸ் மற்றும் சீனா சிறுபான்மை இனத்தவர்களை கையாளும் விதம் குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டி அதற்கு தடை விதித்துள்ளது.

இதேநேரம் செய்திகள் உண்மையாக இருக்கவேண்டும் நேர்மையானதாக இருக்கவேண்டும் சீனாவின் தேசிய நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று சீனாவின் தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு விதிமுறைகளை பிபிசி உலகசேவை செய்திகள் மீறியுள்ளதாகவும் ஒளிபரப்பு செய்வதற்கான பிபிசியின் விண்ணப்பங்களை ஒருவருடத்திற்கு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனா அதிகாரிகளின் இந்த நடவடிக்கை குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாவும், பிபிசி செய்தி சேவையானது உலகின் நம்பகதன்மை மிக்க செய்தி நிறுவனம் எனவும் பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பிபிசி செய்தி சேவைக்கு சீனா தடை விதித்தமைக்கு எதிராக பிரிட்டன் மற்றும் அமெரிக்கா  கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை எற்படுத்தும் நடவடிக்கை எனவும் உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் மற்றும் இணைய சுதந்திரங்களுக்கு சீனா மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப்  குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடைவிதித்து ஊடக சுதந்திரத்தை பறித்துள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இதேநேரம் கொரோனா வைரஸ் மற்றும் சீனா சிறுபான்மை இனத்தவர்களை கையாளும் விதம் குறித்து பிபிசி வெளியிட்ட செய்திகளை சீனா ஏற்கனவே கடுமையாக விமர்சித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.