October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறைகள்; டிரம்பிற்கு எதிரான விசாரணையில் புதிய வீடியோ வெளியீடு

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறைகளில் ஈடுபட்டதை காண்பிக்கும் புதிய வீடியோவை அமெரிக்க ஜனநாயக கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.

டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றவியல் விசாரணையின் போது இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபடுவதை இந்த வீடியோக்கள் காண்பித்துள்ளன.பொலிஸார் உதவி கோருவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்றத்திற்குள் காணப்பட்ட அதிகாரிகளை பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டுசெல்வதையும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மிக அருகில் காணப்படுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

இந்த வீடியோக்கள் முதல் தடவையாக வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் உடல்கவசங்களுடன் காணப்படுகின்றனர்.

அவர்கள் ஆக்ரோசத்துடன் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைகின்றனர். அதிகாரிகளை தேடி திரிகின்றனர்.
வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு பேஸ்போல் மட்டைகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை தங்களிற்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என்பதை பொலிஸார் தெரிவிப்பதை வீடியோவில் கேட்க முடிகின்றது.

ஒரு வீடியோவில் குடியரசுக்கட்சியின் செனெட்டர்மிட் ரொம்னி ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி செல்வதையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை பாதுகாப்பான இடங்களிற்கு அழைத்து செல்வதையும் காணமுடிகின்றது.

அவ்வேளை துணை ஜனாதிபதியாக பதவி வகித்த மைக் பென்ஸினை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வெளியேற்றுவதை காணமுடிவதுடன், வன்முறையில் ஈடுபட்டவர்கள் நான்சி பெலோசியின் பெயரை சொல்லி அவரை அழைப்பதையும் காண முடிந்துள்ளது.