சர்வதேச அளவில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக நான்காவது வாரமாகக் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் படி, கடந்த வாரம் சர்வதேச அளவில் 3.1 மில்லியன் பேர் புதிதாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிடும் போது 17 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இரண்டாவது வாரமாக குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கொரோனாவைரசினால் 88,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது பத்துவீதம் குறைவை காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
பல நாடுகளில் தொடர்ந்தும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போதிலும் சர்வதேச அளவில் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைவது நம்பிக்கை அளிப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதுவரை உலக நாடுகளிடையே அமெரிக்காவிலேயே (871,365 ) அதிகளவு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும் கடந்தவாரத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 19% வீழ்ச்சியை காட்டுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
அனைத்து பிராந்தியங்களிலும், கடந்த இரு வாரங்களுக்கு இடையேயான தரவுகளின் ஒப்பீட்டளவில், ஆப்பிரிக்காவில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 22% விதத்தில் மிக கூடிய சரிவை காண்பித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை உலகளவில் இதுவரை, 107 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.