(Photo:Kenneth Roth/ Twitter)
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியமை குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார நிபுணர் குழுவை அமெரிக்காவும் தனது நாட்டுக்கு அழைக்க வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
சீனாவைப் போல அமெரிக்காவும் வெளிப்படையான மனோநிலையை வெளிப்படுத்தி கொரோனா வைரஸின் ஆரம்பம் குறித்த விசாரணைக்காக தனது நாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவை அழைக்கும் என எதிர்பார்ப்பதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து தான் பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தன.
இதைக் கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸின் தோற்றம் குறித்துக் கண்டறிய உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு சீனாவின் வூஹான் நகரில் ஆய்வை மேற்கொண்டது.
இந்நிலையில் சீனாவின் வூஹானிற்கான தமது விஜயத்தினை சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் முடித்துக்கொண்டு கருத்து வெளியிட்டுள்ளது.
இதேவேளை வூஹான் ஆய்வுக்கூடத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தவிடயம் தொடர்பில் நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் எம்பாரக் கூறுகையில், கொரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, தற்செயலாக அங்கிருந்து வெளியேறி பொதுமக்களுக்குப் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
அத்தோடு ஆய்வுகூடத்திலிருந்து வைரஸ் கசிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அந்த வைரஸ் எவ்வாறு உருவானது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இன்னும் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வைரஸ் பரவல் குறித்து இதுவரை தெரியவந்த விடயங்களில் பாரிய மாற்றத்தை அது ஏற்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வெளவால்களில் இருந்தே கொரோனா பரவியிருக்கலாம் என்ற முடிவிற்கு வரமுடிந்தாலும் அது வூஹானில் இடம்பெற்றிருப்பதற்கான வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.