July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மியன்மாரின் இராணுவ தலைவர்கள் விடுதலை செய்யவேண்டும்’

மியன்மாரின் தடுத்துவைத்துள்ள அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமென பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இராணுவ தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இராஜதந்திரிகளுக்கான வருடாந்த உரையில் பரிசுத்த பாப்பரசர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பல மோதல்களை சுட்டிக்காட்டிய பாப்பரசர், மியன்மார் மக்களுடனான தனது நெருக்கத்தையும் அவர்களுக்கான தனது நேசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

2017இல் மியன்மாருக்கு விஜயம் மேற்கொணடதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

சமீபத்தைய ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான பாதையில் கடந்தவார சதிப்புரட்சி குறுக்கிட்டுள்ளது என பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

இது பல அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது.இவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

மியன்மார் தலைநகரில் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை மியன்மாரில் இடம்பெற்ற சதிப்புரட்சியின் பின்னர் சதிப்புரட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் மியன்மாரில் வலுத்துவருகின்றன.

மருத்துவர்கள், பல்கலைகழக மாணவர்கள் ,ஆசிரியர்களுடன் மருத்துவதாதிமாரும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
அனைத்து அரச ஊழியர்களையும் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்துகொள்ளுமாறு வலியுறுத்தும் இந்த பிரசாரத்திற்கு நாங்கள் தலைமை வகிக்கின்றோம் என யங்கூனில் போராட்டத்தில் கலந்துகொண்ட அரச மருத்துவமனையின் மருத்துவ தாதியொருவர் தெரிவித்தார்.

நாங்கள் இராணுவ ஆட்சியை முற்றாக இல்லாமல் செய்வதற்கு முயல்கின்றோம். நாங்கள் எங்கள் தலைவிதிக்காக போராடவேண்டும் என்பதே மக்களிற்கான எங்கள் செய்தி என அவர் தெரிவித்துள்ளார்.