
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள நியுஹாம் உள்ளூராட்சி மன்றத்தின் நகரசபை மண்டபத்தில் பறக்கவிடப்பட்டிருந்த இலங்கையின் தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அகற்றப்பட்டுள்ளது.
பிரித்தானியா வாழ் தமிழர்கள், தமிழ் இளையோர் அமைப்பின் உதவியுடன் மின்னஞ்சல் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில், நியுஹாம் உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் உடனடியாக இலங்கையின் தேசிய கொடியை அகற்றியுள்ளது.
“உங்கள் நடவடிக்கையால் நாம் மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இந்தச் செயல் நியுஹாம் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் மனதைப் பாதிக்கும் என்பதைச் சிந்திக்காமல் மேற்கொள்ளப்பட்டமை வருத்தம் அளிக்கின்றது. இலங்கை அரசாங்கத்தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே தயவுசெய்து அந்த கொடியை அகற்றுங்கள்” என பிரித்தானிய வாழ் தமிழர்கள் மின்னஞ்சல் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
மேலும்,’இது எங்களின் சுதந்திர நாள் அல்ல’ #notmyindependence என்றும் ‘இலங்கை ஒரு இன அழிப்பு செய்யும் நாடு’ #Srilankagenocide என்ற குறியீடுகள் இளையோர் அமைப்பினரின் சமூக வலைத்தளங்கள் மூலம் ட்விட்டரில் பகிரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மேற்படி மின்னஞ்சல்களுக்கு பதிலளித்த நியுஹாம் உள்ளூராட்சி மன்ற தலைவர் ரோக்சனா ஃபியாஸ், ”இச்செயல் தொடர்பில் நான் வேதனையும், வருத்தமும் அடைகின்றேன். இது தொடர்பாக தலைமை நிர்வாகியிடம் விசாரணை செய்யும் படி பணித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.