April 29, 2025 11:08:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஜனநாயகமே அவசியம்” – ஒரு தசாப்த காலத்தில் மியன்மாரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்!

மியன்மாரில் இன்றும் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக பல நகரங்களில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

2007 இல் காவிப்புரட்சி என அழைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் இராணுவ ஆட்சியாளர்களின் எழுச்சிபேரணிக்கு பின்னர் தலைநகரில் இடம்பெறும் மிகப்பெரிம் போராட்டம் இது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தலைநகர் யங்கூனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தமக்கு இராணுவ சர்வாதிகாரம் அவசியமில்லை எனவும் ஜனநாயகமே அவசியம் எனவும் கோஷம் எழுப்பியுள்ளனர்.

அவர்கள் உடைந்த சிவப்பு பலூன்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட பலர் மியன்மார் இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தின் குறியீடாக மாறியுள்ள மூன்றுவிரல் சமிக்ஞையை காண்பித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இராணுவ ஆட்சிக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை எனவும் அச்சத்தில் வாழவிரும்பவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமது அன்னை ஆங் சான் சூசி நியாயமற்ற தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்படுவதை தாம் விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நகரத்தின் மையப்பகுதியில் உள்ள சுலே பகோடாவிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றுள்ளனர். அந்த பகுதியில் கலகமடக்கும் பொலிஸார் காணப்பட்டபோதிலும் வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவ ஆட்சியாளர்கள் இணையத்தை தடை செய்துள்ள நிலையிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.