January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யேமனின் ஹவுத்தி கிளர்ச்சி குழுவை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அமெரிக்கா தீர்மானம்

யேமனின்  ஹவுத்தி  கிளர்ச்சி குழுவினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஜோ பைடன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

யேமனின் மனிதாபிமான நெருக்கடியை கருத்தில் கொண்டே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் இதனை உறுதிசெய்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் இறுதி நேர நடவடிக்கை காரணமாக உருவாகியுள்ள மனிதாபிமான நிலைமையை கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் யேமனின் ஹவுத்தி கிளர்ச்சிக்குழுவை பயங்கரவாத பட்டியலில் இணைந்துகொள்ள தீர்மானித்தமை உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என ஐ.நா. அமைப்புகளும் ஏனைய அமைப்புகளும் தீர்மானித்துள்ளன என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

யேமன் மீதான சவுதி அரேபியாவின் தாக்குதலிற்கான ஆதரவை அமெரிக்கா இடைநிறுத்தியுள்ளதை தொடர்ந்தே இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.

மனிதாபிமான உதவிகளை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு இது பெரும் நிம்மதியை அளிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீபனே டுஜாரிக் தெரிவித்துள்ளார்.டொனால்ட் டிரம்ப் பதவியிலிருந்து விலகுவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் ஹவுத்தி அமைப்பினரை மைக் பொம்பியோ பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.