ருமேனியாவில் உள்ள ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில், பிறந்து ஆறுவாரமே ஆன குழந்தைக்கு நடத்தப்பட்ட ஞானஸ்நான சடங்கின் போது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச் சடங்கின் போது குழந்தையின் தலையை பாதிரியார் மூன்று முறை புனித நீரில் மூழ்கச் செய்துள்ளார்.
இதன் போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனினும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக மரணத்தைத் தழுவியுள்ளது.
குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் நுரையீரலில் நீர் புகுந்து அடைத்ததன் காரணமாகக் குழந்தை உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பாதிரியார் மீது மனிதக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கக்கட்டுள்ளன.
இந்நிலையில், ஞானஸ்நான சடங்குகளை மாற்றி அமைக்கக் கோரி சமூகநல அமைப்புகள் அழுத்தங்களை மேற்கொண்டுள்ளன.
இதற்கமைய குறித்த சடங்கில் மாற்றங்களைக் கோரும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்ட மனுவில் 56,000 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை, குழந்தையை முழுவதுமாக தண்ணீரில் மூழ்குவதற்குப் பதிலாக குழந்தையின் நெற்றியில் சிறிது தண்ணீர் ஊற்றலாம் அல்லது தெளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும் தேவாலயத்தின் பாரம்பரிய வாத பிரிவின் தலைவரான பேராயர் தியோடோசி, சடங்கில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்மைகாலமாக ருமேனியாவில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.