April 29, 2025 11:51:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மாரில் தொடரும் கைதுகள்: ஆங் சான் சூ சியின் முக்கிய உதவியாளரும் கைது

(Photo:TRT World Now/Twitter)

மியன்மார் அரசாங்கத்தின் அரசியல் தலைவர்களின் முக்கிய சகாக்கள் உட்பட பலரை கைது செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு இராணுவம் ஆரம்பித்துள்ளது.

இதேநேரம் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள மியன்மார் தலைவர் ஆங் சான் சூ சியின் நெருங்கிய சகாவான வின் ஹெடின்  (79) உட்பட 30 பேர் இராணுவத்தினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதாக பிரசாரம் செய்த போது கைது செய்யப்பட்டு யாங்கோனில் இருந்து தலைநகர் நய்பிடாவிற்கு பொலிஸ் அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டார்.

இதன்போது ‘நாங்கள் மிக நீண்டகாலமாக மோசமாக நடத்தப்பட்டுள்ளோம் எனவும் நான் ஒருபோதும் இவர்களை பார்த்து அஞ்சியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் அரசியல் கைதுகளை கண்காணிக்கும் யாங்கோனை தளமாக்கொண்ட அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் கூற்றுப்படி ஆட்சி கவிழப்பு தொடர்பாக இது வரை 130 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சட்டம் இயற்றுபவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்களும் ஆசிரியர்களும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை மியன்மாரில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில்கொண்டு குறுகிய காலத்திற்கு அந்நாட்டில் பேஸ்புக் முடக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே சில காலத்திற்கு மியான்மரில் பேஸ்புக்கை முடக்கவும் “டெலினோர் மியன்மார்” என்ற அமைப்பு தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.