
File Photo : Twitter/@BuzzPosts
இனப்படுகொலையிலிருந்து தப்பி பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ள மியன்மாரின் ரொகிஞ்சா அகதிகள் ஆங் சான் சூ சியின் நிலைமையை பார்த்து கவலையடையவில்லை என தெரிவித்துள்ளனர்.
பங்களாதேசின் கொக்ஸ்பசாரின் குட்டுபலொங் அகதிமுகாமில் உள்ள ரொகிஞ்சா அகதிகளே அல்ஜசீரா செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளனர்.
நாங்கள் மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சியை கண்டிக்கின்றோம் ஆனால் ஆங் சான் சூ சிக்காக கவலைப்படவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
இத்துடன் ஆங் சான் சூ சி அதிகாரத்தில் இருந்த காலத்திலேயே இராணுவம் ரகைனில் தங்கள் இனத்தவர்களை கொலை செய்ததாக ரொகிஞ்சா சமூகத்தலைவர் முகமட் யூனுஸ் அர்மான் தெரிவித்துள்ளார்.
இதன் போது ஆங் சான் சூ சி, இனப்படுகொலை குறித்து மௌனமாகயிருந்ததாகவும் அவர் ரொகிஞ்சா என்ற சொல்லை கூட பயன்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னர் தமது இனத்தவர் அவருக்காக பிரார்த்தனை செய்வதுண்டு எங்கள் மகாராணி போல அவரை கருதுவதுண்டு ஆனால் 2017க்கு பின்னர் அவரது உண்மையான குணத்தை நாங்கள் உணர்ந்தோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில், அவர் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டமை குறித்து நாங்கள் கவலையடைவில்லை என அர்மான் தெரிவித்துள்ளார்.