July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.நாவின் தீர்மானத்திலிருந்து மியன்மாரை காப்பாற்றியது சீனா!

File Photo : Twitter/@BabiiBjyx

மியன்மாரின் ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளதைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின்  தீர்மானத்தை  நிறைவேற்றுவதற்கு சீனா ஆதரவு வழங்க மறுத்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபை செவ்வாய்க்கிழமை மியன்மார் குறித்து ஆராய்ந்ததுடன் மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை கொண்டுவந்தது.

குறித்த தீர்மானத்தில், “இராணுவ சதித்திட்டத்தைக் கண்டிக்க வேண்டும்” என்றும் ஆட்சி கவிழ்ப்பு தலைவர்கள் “சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்றும் நாடு முழுவதும் தடையின்றி மனிதாபிமான அணுகலை அனுமதிக்க வேண்டும் என்றும் தமது உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது.

எனினும் இத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் பாதுகாப்பு சபையில் வீட்டோ (தடுத்து நிறுத்தும் அதிகாரம் ) அதிகாரத்துடன் உள்ள சீனாவின் ஆதரவு இல்லாததன் காரணமாக சாத்தியமற்றதாக மாறியுள்ளது.

மியன்மார் இராணுவத்திற்கு எதிராக தடைகளை விதிப்பது அல்லது சர்வதேச அழுத்தங்களை கொடுப்பது நிலைமையை மேலும் சிக்கலானதாக மாற்றும் என கடந்த சில நாட்களாக சீனா தெரிவித்துவருகின்றது.

இந்நிலையில், ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ஆதரவும் வழங்க மறுத்துள்ளது.

மியன்மாரின் நெருங்கிய சகாக்களில் ஒன்றான சீனா, அந்த நாடு தனக்கு பொருளாதார ரீதியில் முக்கியத்தும் வாய்ந்தது என கருதுகின்றது.

இதன் அடிப்படையிலேயே சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளிலிருந்து சீனா நீண்டகாலமாக மியன்மாரை பாதுகாத்து வருகின்றது.

இதேவேளை, ரோகிங்யா இனத்தவர்களிற்கு எதிரான படுகொலைகளின் போதும் ஐ.நாவின் கடும் விமர்சனங்களில் இருந்து சீனா மியன்மாரை காப்பாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.