January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மாரில் இராணுவப்புரட்சி: நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு போராட்டங்கள்

(Photo: Matthew Tostevin/Twitter)

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 30 நகரங்களில் சுமார் 70 மருத்துவனைகள் மற்றும் மருத்துவ துறையினர் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மியன்மார் சட்ட ஒத்துழையாமை இயக்கம் என்ற குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விவகாரத்தில் மியன்மார் அரசுக்கும் அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.

இதனையடுத்து நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரச அதிகாரிகளை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

இந்நிலையில் இராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட  ஒத்துழையாமை இயக்கம் சமூக ஊடகங்களில் ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு விடுத்தது.

அதற்கமைய நேற்றையதினம் மியன்மாரின் தலைநகர் யாங்கோனின் உள்ள வீதிகளில் மக்கள் பானைகளை தட்டி ஓசை எழுப்பியதுடன் வாகனங்களில் “ஹோர்ன்” சத்தத்தை எழுப்பியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் தங்களது எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.

அத்தோடு ஆங் சான் சூகிக்கு தங்கள் ஆதரவைக் காட்ட மக்கள் “ஒன்லைன்” தளங்களுக்குச் சென்று எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தலைவருக்கு ஆதரவாக பலர் தங்கள் சுயவிபரப் படங்களை சிவப்பு நிறமாக மாற்றியுள்ளதுடன் சிவப்பு நிறக்குறியீட்டைக் கொண்ட ரிப்பனைக் கட்டி பலர் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை “இராணுவத்திற்கு கீழ் பணியாற்ற மாட்டோம்” என்று வலியுறுத்திய மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் இந்த பிரசாரம் கடுமையாக வலுப்பெற்றுள்ளது.

எனினும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் கரிசனை செலுத்தவுள்ளதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவப் புரட்சியாளர்களின் கோரிக்கைகளுக்கோ அழுத்தங்களுக்கோ அடிபணியப் போவதில்லை என தெரிவித்துள்ள சுகாதாரத் தரப்பினர், கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் இராணுவ புரட்சியாளர்கள் எவ்வித கரிசனையையும் கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.