November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்ய எதிர்கட்சித் தலைவருக்கு மொஸ்கோ நீதிமன்றம் மூன்றரை வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்சே நவால்னிக்கு மொஸ்கோ நீதிமன்றம் மூன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே எதிர்கட்சி தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர் இரண்டு வருடங்கள் எட்டுமாதங்களுக்கே சிறைத்தண்டனையை அனுபவிப்பார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறைத்தண்டனைக்கு எதிராக முறையீடு செய்யப்போவதாகவும் எதிர்கட்சித் தலைவரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் குறித்தும் அவரது ஆட்சி குறித்தும் அலெக்சே நவால்னி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் பழைய வழக்கு ஒன்றில் பிணை பெற்றிருந்த அவர், மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நவால்னி மீதான வழக்கு மாஸ்கோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

நீதிமன்றில் தனது தரப்பின் வாதத்தை முன்வைத்த நவால்னி, எதிர்கட்சியை அச்சுறுத்துவதற்காக தனக்கு எதிரான விசாரணை பயன்படுத்தப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் பெருமளவானவர்களை அச்சுறுத்துவதே எனவும் மில்லியன் கணக்கானவர்களை அச்சுறுத்துவதற்காக ஒருவரை சிறைக்கு அனுப்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து தெரிவித்துள்ள ரஷ்ய எதிர்கட்சி தலைவர், ரஷ்யாவின் சமஸ்டி பாதுகாப்பு பிரிவை பயன்படுத்தி புட்டின் என்னை கொலைசெய்ய முயன்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொலை முயற்சிக்கு ஆளான ஒரேயொரு நபர் நான் மாத்திரமில்லை. பலருக்கு ஏற்கனவே இந்த அனுபவம் உள்ளது மேலும் பலருக்கு இந்த அனுபவம் கிடைக்கலாம்.விளாடிமிர் புட்டின் நஞ்சூட்டியவர் என வரலாற்றில் பதியப்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணையின் முடிவில் நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.