தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இட்டுக்கட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சேய் நவல்னி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தன்னை நஞ்சூட்டி கொலை செய்ய முயன்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் தனது தரப்பின் வாதத்தை முன்வைத்து கருத்து வெளியிடுகையில் எதிர்கட்சியை அச்சுறுத்துவதற்காக தனக்கு எதிரான விசாரணை பயன்படுத்தப்படுகின்றது என நவல்னி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் பெருமளவானவர்களை அச்சுறுத்துவதே எனவும் மில்லியன் கணக்கானவர்களை அச்சுறுத்துவதற்காக ஒருவரை சிறைக்கு அனுப்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து தெரிவித்துள்ள ரஷ்ய எதிர்கட்சி தலைவர், ரஷ்யாவின் சமஸ்டி பாதுகாப்பு பிரிவை பயன்படுத்தி புட்டின் என்னை கொலைசெய்ய முயன்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொலை முயற்சிக்கு ஆளான ஒரேயொரு நபர் நான் மாத்திரமில்லை. பலருக்கு ஏற்கனவே இந்த அனுபவம் உள்ளது மேலும் பலருக்கு இந்த அனுபவம் கிடைக்கலாம்.விளாடிமிர் புட்டின் நஞ்சூட்டியவர் என வரலாற்றில் பதியப்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சேய் நவல்னிக்கு சிறைத்தண்டனை விதிப்பது குறித்து விசாரணை செய்துவரும் நீதிமன்றத்திற்கு வெளியே நின்றிருந்த எதிர்கட்சி தலைவரின் ஆதரவாளர்கள் 200 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் பொலிஸாரின் நடவடிக்கைகளை கண்காணித்துவரும் கண்காணிப்பு குழுவும் தனியார் மனித உரிமை அமைப்பொன்றும் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட எதிர்கட்சி ஆதரவாளர்கள் 500 0க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.