January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டனின் 100 வயது சமூகத் தொண்டன் ‘கேப்டன் டொம்’ காலமானார்!

Image : Twitter/@captaintommoore

பிரிட்டனில் கடந்த ஆண்டு முதலாவது கொவிட்-19 முடக்கத்தின் போது, சுகாதார சேவை தொண்டு நிறுவனங்களுக்காக நிதி சேகரிக்கும் நோக்குடன் தனது வீட்டுத் தோட்டத்தில் 100 அடிகள் மெதுவாக நடந்து வந்து பலரின் இதயங்களையும் வென்றவர் கேப்டன் டொம்.

தனது 100வது பிறந்த நாளான 2020 ஏப்ரல் 30க்குள் வெறும் 1000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நன்கொடையாக சேகரிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது.

எனினும் நடக்கத் தொடங்கிய சில நாட்களில் மக்கள் மத்தியில் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம், 100 வது பிறந்தநாளில் 30 மில்லியன் பவுண்டுகளை கேப்டன் டொம் சேகரித்திருந்தார். அந்தத் தொகை பின்னர் சுமார் 39 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்தது.

தனியொரு நபராக சமூகத் தொண்டுக்காக அதிகூடிய நிதியை சேகரித்ததன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் இடம்பிடித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது, இந்தியா, பர்மா உள்ளிட்ட நாடுகளில் பிரிட்டனின் இராணுவ வீரராக பணியாற்றியிருந்த கேப்டன் மூர், கடந்த ஆண்டில் புரிந்த சாதனைக்காக பிரிட்டிஷ் மகாராணியால் உயர் சிவில் விருது (சேர்) வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

இந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கேப்டன் சேர் டொம் மூர் இன்று காலமானார்.

கேப்டன் டொம் மூர் ‘முழு நாட்டுக்கும், உலகுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்’ என பிரிட்டிஸ் மகாராணி தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலக முன்றலில் நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.