(FilePhoto)
இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள மியன்மார் நாட்டின் மீது பொருளாதாரத் தடைவிதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
இதேநேரம் இராணுவத்தினர் ஒருபோதும் மக்களின் விருப்பத்தை மீறுவதற்கோ அல்லது நம்பகமான தேர்தல் முடிவுகளை மீறுவதற்கோ முயற்சிக்கக் கூடாது எனவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயகத்தின் பாதையில் பயணித்த மியன்மார் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்கியது.
எனினும் அங்கு மீண்டும் சர்வாதிகாரம் தலைதூக்கும்பட்சத்தில் தடைகளை விதிக்க அமெரிக்கா தயங்காது எனவும் பைடன் எச்சரித்துள்ளார்.
அத்தோடு ஜனநாயகம் உலகின் எந்த பகுதியில் தாக்கப்பட்டாலும் அமெரிக்கா ஜனநாயகத்தின் பக்கம் நின்று அதற்காக குரல்கொடுக்கும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மியன்மார் இராணுவம் அனைத்து அரசியல் தலைவர்களையும் சிவில் சமூக தலைவர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கென் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயக தேர்தல் மூலம் மியன்மார் மக்கள் வெளிப்படுத்திய விருப்பத்தினை இராணுவத் தலைவர்கள் மதிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் அல்லது ஜனநாயக மாற்றங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் எதிர்ப்பதாக இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.