February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்க வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதனால் இங்கிலாந்தில் அவசர சோதனைகள் ஆரம்பம்

கொரோனா மரண எண்ணிக்கை

தென்னாபிரிக்காவுடன் போக்குவரத்து தொடர்பு எதுவும் இல்லாத நபர்கள் தென்னாபிரிக்காவில் காணப்படும் வீரியமிக்க வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் இங்கிலாந்தின் சில பகுதிகளில் அவசர சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சர்ரே லண்டன் கென்ட் ஹெட்போர்சையர் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் நோய் அறிகுறிகள் இல்லாதபோதிலும் சோதனைக்கு வருமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னர் லண்டனில் தென்னாபிரிக்க வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவர்களிற்கு தென்னாபிரிக்காவுடன் தொடர்புள்ளமை உறுதியாகியிருந்தது.எனினும் தென்னாபிரிக்காவுடன் தொடர்பில்லாத 11 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்க வைரஸினால் பாதிக்கப்பட்ட 105 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் தென்னாபிரிக்காவுடன் எந்தவித தொடர்புகளும் இல்லாதவர்கள்.

இதன் காரணமாக சமூகதொற்று குறித்த அச்சநிலை தோன்றியுள்ளது.இதனைதொடர்ந்து நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளிற்கு நடமாடும் சிகிச்சை நிலையங்களை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தென்னாபிரிக்க வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்கான சோதனைகளும் இடம்பெறும்.

குறிப்பிட்ட சில பகுதிகளை பெயரிட்டுள்ள அதிகாரிகள் அந்த பகுதிகளை சேர்ந்தவர்களை சோதனைக்கு முன்வருமாறு கோரியுள்ளனர்.