File Photo : Twitter/@YYM67615352
கடந்த நவம்பரில் மியன்மாரில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாகவே அரசியல் தலைவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் விளக்கமளித்துள்ளது.
காணொளிப் பதிவொன்றினூடாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள மியன்மார் இராணுவம், இராணுவ தளபதி ஆங் லையிங்கிடம் நாட்டின் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நவம்பர் 8 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் அட்டைகளில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ள போதிலும் தேர்தல் ஆணையம் இதற்குத் தீர்வை காணவில்லை என குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசத்தின் இறைமை மக்களிடமிருந்தே பெறப்படவேண்டியது என்ற போதிலும் இது ஸ்திரமான ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு முரணான விடயம் என இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்குத் தவறியமையும், நாடாளுமன்ற அமர்வுகளை பிற்போடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தமையும் அரசியலமைப்பிற்கு முரணான விடயங்கள் எனவும் குறித்த காணொளி பதிவு தெரிவிக்கின்றது.
இந்த நடவடிக்கை காரணமாக தேர்தல் ஆணையகத்தின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் விதத்தில் மியன்மாரின் நகரங்களிலும் கிராமங்களிலும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாவதாக குறிப்பிட்டுள்ள இராணுவம் இந்த ஆர்ப்பாட்டங்கள் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
சட்டத்தின் மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வை காணாவிட்டால் இது ஜனநாயகத்திற்குத் தடையாக அமையும் இதன் காரணமாகவே இந்த அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டது என இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
அத்துடன் இந்த அவசர காலநிலை ஒரு வருடகாலத்திற்கு நீடிக்கும் எனவும் குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.