January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமார் 3000 ஆண்டுகள் பழமையான ‘ஊதா சாயம்’ சேர்க்கப்பட்ட துணி இஸ்ரேலில் கிடைத்துள்ளது

படம்: இஸ்ரேலிய தொல்பொருள் அதிகாரசபை

இஸ்ரேலில் தாவீது மன்னரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தததாக அறியப்படும் ஊதா நிறச் சாயம் சேர்க்கப்பட்ட துணி ஒன்றை இஸ்ரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜெருசலேமுக்கு தெற்கே 220 கி.மீ (137 மைல்) தொலைவில் அமைந்துள்ள டிம்னா என்ற இடத்தில் “ஸ்லேவ்ஸ் ஹில்” எனப்படும் அகழ்வாய்வுப் பகுதியில் இந்தத் துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துணிப் படிமம் சுமார் 3000 ஆண்டுகள் முன்னர் (கி.மு. 1000) தாவிது மன்னரும் அவரது மகன் சாலமோனும் ஆட்சி புரிந்த காலத்தை சேர்ந்தது என்று கார்பன்-தொழில்நுட்ப ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர், இந்த வகையான ஊதா நிறச் சாயம் பயன்படுத்தப்பட்டுள்ள சிப்பி வேலைப்பாடுகள், மட்பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்களே கண்டெடுக்கப்பட்டுள்ளன, துணித் துண்டு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

‘இந்த ஊதா நிறச் சாயம் சேர்க்கப்பட்ட துணி தங்கத்தை விட மதிப்பு கூடியது’ என இஸ்ரேலிய புராதனப் பொருட்கள் அதிகாரசபையின் நிபுணர் டாக்டர் நாமா சுகெனிக் தெரிவித்துள்ளார்.

‘தொல்லியல் பொருட்களில் ஊதா நிற ஆடை-அணிகலன்கள், கௌரவ அந்தஸ்தை, குறிப்பாக மத குருமாரையும் மன்னரையும் குறிக்கின்றன’ என்றும் டாக்டர் நாமா சுகெனிக் கூறினார்.

மன்னர்களான தாவீது, சொலமன் ஆகியோரும் இயேசு நாதரும் அணிந்திருந்த ஆடைகள் பற்றிய தரவுகள் உட்பட, யூத மற்றும் கிறிஸ்தவ பைபிள்களில் பல இடங்களில் இந்த ஊதா நிறம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இப் பழங்கால ஊதா நிற உடையானது பிரபுக்களுடனும், பூசாரிகளுடனும் அரசர்களுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.