மியன்மாரின் ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைவி ஆங் சான் சூ சி, ஜனாதிபதி வின் மியின்ட் மற்றும் சில அரசியல் தலைவர்கள் அந்நாட்டு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
மியன்மாரின் புதிய நாடாளுமன்றம் இன்று கூடவிருந்த நிலையில், அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் ஐநா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மியன்மாரின் சட்டமன்ற, நிறைவேற்று மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் அனைத்தையும் இராணுவத்தின் கீழ் மாற்றுவதற்கான அறிவிப்புக்கு ஐநா கவலை தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் இந்த செயற்பாடு மியன்மாரில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு கடுமையான அடியாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற ஆசனங்களை சூ சியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி பெற்றிருந்ததையும், பொது மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனநாயகம், அமைதி, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பின்தொடர்வதில் மியன்மார் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.