April 29, 2025 12:01:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மார் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது!

மியன்மாரை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள அந்நாட்டு இராணுவம், அங்கு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

மியன்மாரில் ஆளும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் தலைவர் ஆங்சான் சூ சி உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் இராணுவத்தினரால் கைதுசெய்யபபட்டு சில மணிநேரத்தின் பின்னர் இராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டின் நிர்வாகத்தை இராணுவத் தளபதி மின் ஆங் ஹேலிங்கிடம் கையளிப்பதாக மியன்மார் இராணுவம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து தலைநகரம் உட்பட முக்கிய இடங்களிலும், வீதிகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மியன்மார் இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சில நாட்களாக காணப்பட்ட முறுகல் நிலை காரணமாக சதிப்புரட்சி குறித்த அச்சம் காணப்பட்டது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் இராணுவம் உருவாக்கிய அரசமைப்பிற்கு முரணான திட்டம் என மியன்மாரில் உள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆங்சாங் சூ சி போன்ற தலைவர்களை கைதுசெய்து தடுத்துவைப்பது மிகவும் ஆபத்தான விடயம் எனவும், இதனால் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சந்திக்கவேண்டியிருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.